அடுத்த வரிசை உங்கள் பால்யம் முதல் இளமை வரை நீங்கள் கண்ட ஒரு கிராம வாழ்வின் அழகிய பிரதி – ஆனையில்லா, வருக்கை, மதுரம், பூனை, துளி,இடம் , மொழி , தங்கத்தின் மணம், சூழ்திரு – அனைத்து கதைகளிலும் கேலியும் நகைச்சுவையும் நன்கு கூடி வந்திருக்கின்றன, பழைய பெருமை குறித்த ஒரு சரடு , இறைவனை மதத்தை துணைக்கு அழைத்தபடியே இருக்கும் மக்களின் மாண்பு, திடீர் கூக்குரல் , மட்டற்ற மகிழ்ச்சி , ஒரு பார்வையில் வெள்ளந்தி மாற்றி நோக்குகையில் விவரம் ,விலங்குகளூடான ஒரு ஒத்திசைவு , குழந்தைகள் பெரியவர் ஆகுதல் , பெரியவர் குழந்தைகள் ஆகுதல் – இத்தொகுப்பை அப்படியே மால்குடி டேஸ் போன்ற ஒரு தொகுப்பாக கோட்டு சித்திரங்களுடன் காண்பதற்கு அருமையாக இருக்கும் .
அடுத்த வரிசை தங்கள் பணியிடம் தொடர்பானது – வான் நெசவு , வான் கீழ் , உலகெலாம் , சுற்றுக்கள் , வானில் அலைகின்றன நட்சத்திரங்கள் , மலைகளின் உரையாடல், குருவி , நகைமுகன் மற்றும் லூப் , எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக லூப் மற்றும் நகைமுகன் இரண்டையும் சொல்வேன் – லூப் ஒரு சில வரிகளிலேயே சூழியல் சார்ந்த கதையாக , மாற்றம் குறித்த ஒரு சிந்தனையை அடிக்கோடிடுகிறது , வளர்ச்சி என்னும் பெயரில் வளங்கள் சூறையாடப்படுகையில் இயற்கையின் லூப்பை உணர்தல் அவசியமாகிறது – நகைமுகன் – சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர்,
இதற்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிப்பதே ஒரு பெரிய பணியாக இருக்கும் என நினைக்கிறேன்