அவர்கள் நடத்திவந்த காவலர்படை கருவூலத்தைச் சூழ்ந்திருக்க அவர்கள் தங்கள் தனிப்பட்ட காவலர்படையுடன் பெருந்திரளுக்கு சற்று அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார் என்று அனைவரும் அறிந்திருந்தமையால் அவர்களை அரசருக்கு நிகராகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் அரசுநடத்தலில் நேரடியாக தலையிடக்கூடாது என்று எண்ணினர்.
நான் சாத்யகியின் படைகளை அணுகியபோது அவருடைய முதற்காவலன் என்னை நோக்கி வந்து வணங்கினான். என்னிடம் என் அலுவல் ஏது என்று வினவினான். “நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை” என்றேன். “அவர்களிருவரும் இன்று காலைதான் பாலையில் வேட்டைக்கு சென்றார்கள்” என்றான். “வேட்டைக்கா? இப்பொழுதா?” என்றேன். “ஆம், தனிப் புரவிகளில் சென்றார்கள்” என்றான்.
நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன்