அவன் வாசலில் மறைந்து நின்றான். அவர் இறகுப்பேனாவால் நத்தைவடிவப் புட்டிக்குள் இருந்து நீலநிற மையை தொட்டுத் தொட்டு எழுதினார். நீலநிற கட்டெறும்பு போன்ற எழுத்துக்கள். அந்த தாள் கமுகுப்பாளை போலிருந்தது. எழுதப்பட்ட தாளை அருகே ஒரு கொக்கியில் காயப்போட்டிருந்தார்
அவன் ;”சாமி” என்றான்.
அவர் அவனை திரும்பிப் பார்த்தார். பூனைக்கண்களுடன் அவருடைய பார்வை முறைப்பதுபோலிருந்தது. அவனுக்குச் சிறுநீர் வந்தது. அவன் தப்பி ஓடிவிட நினைத்து கட்டுப்படுத்திக்கொண்டான்
“சாமி உங்களுக்க வண்டு எனக்கு கிட்டிச்சு. அதை நான் இந்த சட்டியிலே வைச்சதினாலே செத்துப்போச்சு” என்று லாசர் சொன்னான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “எனக்க குட்டி செத்தது மாதிரி செத்துப்போச்சு”
“இங்க வா” என்று அவர் அழைத்தார். அவன் அருகே சென்றதும் அவனை அருகே அழைத்து கைகளால் தோளை வளைத்தார். அவன் தலைமேல் கைவைத்து நன்மைஜெபம் செய்தார்.
அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம்