அறிவிலிகளே, போரிட்டு சாகவா போகிறீர்கள்? உங்கள் மைந்தர்களையும் பெண்டிரையும் இந்தப் பாலையில் சாகவிடப்போகிறீர்களா என்ன?” என்று அவர்கள் கூறியதுமே ஒவ்வொருவரும் தங்கள் நிலை உணர்ந்து மீண்டனர். முணுமுணுப்புகளுடன், கசப்புச் சொற்களுடன், காறித் துப்பியபடியும் முகங்களை இளித்து ஒருவருக்கொருவர் பழிப்புக் காட்டியபடியும் விலகிச்சென்றனர்.
அப்பூசல் ஓர் எல்லை கடந்த பிறகே அதை அணைப்பவர் எழுந்தனர். அந்த எல்லையை அது கடந்த பின்னர்தான் அது அணைக்கப்பட இயலும். பூசலில் ஒவ்வொருவரும் தங்கள் உள ஆற்றலை வீணடித்த பின்னர் மேலும் எழ முடியாது திகைத்து நிற்கும்போதுதான் அதை நிறுத்துபவர்களின் சொல் ஏற்கப்பட்டது. அதை அத்தீயை அணைக்கும் அம்முதியவர்களும் அறிந்திருந்தனர். எண்ணி அறிந்திருக்கவில்லை, இயல்பாகவே அப்போதுதான் அவர்கள் உள்ளம் அங்கே சென்றது. இந்த அமைப்பு இப்படித்தான் செயல்படும் என்ற உணர்வை நான் அடைந்தேன். இந்தக் காடு தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ளவும் அணைத்துக்கொள்ளவும் பயின்றிருக்கிறது. அது என்னை சற்று ஆறுதல்படுத்தியது.
பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும்