தைரியமாட்டு போலே…” என்றான் ஜான்சன். “நான் பிறவு வாறேன் என்ன?”
லாசர் பீதியுடன் ‘ஏலே ஒண்ணும் செய்யாதுல்ல?” என்றான்.
“என்ன செய்யும்? ஆருல இவன்? அறிவில்லா மோணையனா இருக்கானே?” என்றான் ஜான்சன்.
லாசர் கலத்துடன் தயங்கித் தயங்கி தன் வீட்டுக்குச் சென்றான். அங்கே முற்றத்தில் அவனுடைய அப்பா நின்றிருந்தார். பக்கத்துவீட்டு அந்தோணிப் பாட்டாவும் எசிலிக்கிழவியும் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் அம்மாவின் அழுகை கேட்டது.
அவன் மெல்ல பனைவிடலிகளின் மறைவு வழியாகச் சென்று அக்கானிப்புரைக்குப் பின்பக்கம் பழைய அடுப்புக்குள் கலத்தை ஒளித்துவைத்தான். அதன்மேல் நாலைந்து பனையோலைகளை போட்டு மறைத்தான். கைகளை நன்றாக துடைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்.
அவனிடம் அக்கானி கொண்டுபோகச் சொல்லியிருந்தாள் அம்மா. அவன் விளையாடப் போய்விட்டான். அம்மா வெளியேவந்து பனைமட்டையால் அடிப்பாள் என நினைத்தான். ஆனால் உள்ளே ஏதேதோ ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.