ஆருலே இவன்? ஏலே அவரு சாமியாருல்லா? அவருக்க கண்ண பாத்தியா? கனகாம்பரம் மாதிரில்லா இருக்கு? சக்கரக்கெளங்கு மாதிரி இருக்குதாரு” லாசர் அவருடைய கண்களை நினைவுகூர்ந்தான். அவனுக்கு அவை வெண்ணிறக் கூழாங்கற்கள் போலிருப்பதாகத் தோன்றியது.
அவன் உடனே திரும்பி அந்த வண்டைப் பார்த்தான். “லேய், இந்த வண்டு சாமியாருக்க கண்ணுமாதிரியாக்கும்” என்றான்.
ஜான்சன் அந்த வண்டைப் பார்த்துவிட்டு ‘ஆமா, அவருக்க கண்ணுமாதிரியாக்கும்..” என்றான்.சிலகணங்கள் பார்த்துவிட்டு “இத நாம அம்பது பைசாவுக்கு விக்கலாம்லே…குட்டி போட்டாக்கா நிறைய அம்பது பைசா கிட்டும்” என்றான்.
லாசர் “குட்டிபோடுமா?” என்றான்.
“பாப்பம், நீ அதை எடு” என்று ஜான்சன் சொன்னான்.
லாசர் பாய்ந்து பின்னகர்ந்து “நானா?” என்றான்.
‘கம்பு வச்சு எடுலே…மோணையன் மாதிரி பயப்படுதான்” என்றான் ஜான்சன்.
லாசர் அருகே கிடந்த இரு குச்சிகளால் அந்த வண்டை மெல்ல தூக்கி எடுத்தான். அது டிக்டிக்டிக் என்றது. அதன் கொடுக்கு துடித்தது. கண்கள் உறுத்து பார்த்தன. வால் தொங்கி ஆடியது.
“வளைஞ்ச வாலாக்கும்”என்றான் ஜான்சன்.
“இதை என்னலே செய்யுதது?” என்றான் லாசர்.
பாட்டா அவரை பிடித்துக்கொண்டார். அப்பா அப்படியே மண்ணில் கால்களை பரப்பி அமர்ந்துகொண்டார்