ஆனால் என்ன அழகான பெயர்கள். திருச்செந்தூர், தூத்துக்குடி. கடல் உள்ள ஊர்களே அழகான பெயர்கள் கொண்டவை. அவன் தலைகுனிந்து அமர்ந்து விம்மினான்.
“ஏலே, ஏம்பிலே? சொல்லு. என்னவாக்கும்?”
லாஸர் ‘அது பைசா இல்லை” என்றான்.
‘பின்ன?” என்றான் ஜான்சன்.
“அது வேற ஒண்ணு…”
ஜான்சன் மண்ணைப்போட்டு அவன் மூடிய குழியை நோக்கியபின் “பவுனா?” என்றான்.
இல்லை என லாசர் தலையாட்டினான்.
“பின்ன என்னலே?”. என ஜான்சன் எரிச்சலடைந்தான்.
லாசர் அழுகையை நிறுத்தினான். ஆர்வமெழுந்தபோது மனதில் துயர் இல்லாமலாகியது. “அது ஒரு காரியமாக்கும்… இந்தா காட்டுதேன்” அவன் மிகமிக மெல்ல ஒரு இலையால் மணலை விலக்கினான். ஜான்சன் ஆவர்த்துடன் எட்டிப்பார்த்தான்.
உள்ளே இருந்த பொருள் வட்டமாக இருந்தது. அப்பச்சியின் சுண்ணாம்புச் செப்பு போல. அதற்கு நீளமான வால் இருந்தது. வாலைச் சுருட்டி அருகே வைத்திருந்தது. ஈரமண்ணில் நத்தை ஊர்ந்து உருவாகும் ஒளிக்கோடு போன்ற வால்.