அவர் உடலில் வயிற்றுடன் சேர்த்து ஒரு இரும்புத்தடி வைத்து கட்டப்பட்டது. பின்னர் சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிக் கலம் ஒன்று அவர் கால் நடுவே உடைக்கப்பட்டது. மெய்யாகவே அந்த இரும்புத்தடியை அவர் ஈன்று புறந்தருவதுபோல நடித்தனர். குழவியென அதை எடுத்துக்கொண்டு சென்று நீராட்டு, பெயர்சூட்டு முதலிய அனைத்து பிறவிச் சடங்குகளையும் செய்தனர். அச்சடங்கில் நானும் பங்கேற்றேன். என் மைந்தனுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தேன். இனிப்பு தொட்டு நாவில் வைப்பது, மலர் எடுத்து இட்டு வணங்கி வாழ்த்துவது என…”
“அன்னையர் இச்சடங்கு நடந்ததை அறியவில்லை. அரண்மனையில் யாதவ மைந்தர் மட்டுமே அறிய இது நடந்தது. அதன் பிறகு அந்த இரும்புத்தடி இறந்துவிட்டது என அவர்கள் அறிவித்தனர். நாங்கள் அதற்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தோம். நாவில் பால்தொட்டு வைத்தோம். அரிமலரிட்டு வணங்கினோம். ஆடை நீக்கி அதை அவர்கள் ஒரு தொட்டிலில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாம்பன் கேட்டார்.