0
30
“கூறுக, என்ன அது?” என்று கிருதவர்மன் கேட்டார். “அக்கனவு ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வண்ணம் ஒரு தீய கனவு வருமெனில் அக்கனவை அவ்வண்ணமே நிகழ்த்தி தீங்கிலாது முடிப்பதே அக்கனவிலிருந்து தப்பும் வழியாக அசுரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இல்லத்தில் பாம்பு வருகிறது என்று கனவு கண்டால் நஞ்சிலாத பாம்பு ஒன்றை இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு அதை பிடித்து திரும்பக் கொண்டு சென்று விட்டுவிட்டால் அந்த வருநிகழ்வில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைப்போல இதற்கும் செய்யலாம் என்றனர்” என்றேன்.
“அவர்களின் சொற்களின்படி ஒரு பூசனைச் சடங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. சாம்பன் கனவில் கண்டவை என்னென்ன என்று விரிவாக உசாவப்பட்டு அவ்வண்ணமே அனைத்தும் ஒருக்கப்பட்டன.