ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே.. எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.
இக்கதைகளில் வரும் போராளிகள் அனைவரும் தியாகத்தின் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இடிமுரசு என்னும் போராளியின் சித்தரிப்பு என்னை ஏதோ செய்ததென்றால் போராளியாக்காவின் செயல் கண்ணில் நீர் வர வைத்துவிட்டது. கடும் சண்டைக்கிடையில் நாய்க்குட்டியைக் காப்பாற்றும் போராளியாக்கா வேனை ஒட்டிச் சென்று எதிரியின் அர்ட்லெறியின் மேல் மோதி ஈழத்திற்காக உயிரை விடுகிறாள்.
சொல்லத்துடிக்கும் இத்துன்பமே இன்பம்.
"எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல்" என்னும் கதையில் காதலும் காமமும் கடலைப் போல வருகிறது. அகதி என்பவன் ஓரிடமும் இல்லாதவனாகிறான். அதே கதையில் வரும் கிரேசி அக்காவின் வாழ்க்கை மற்றும் ஒரு பெரும்துன்பம். அதுவும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழ் நாட்டில் வாழும் ஈழத்துப் பெண்களுக்கு வரும் துன்பத்தை இக்கதையில்தான் முதன்முதலாக படித்தேன்.