திருச்சியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் “ஐவருக்கு ஒருத்தி என்பது என்ன ஒழுக்கம். அது என்ன இதிகாசம். அதைக் கொளுத்துங்கள்” என்றார் ஈ.வே.ரா. சிங்கமென எழுந்தார் ஜெயகாந்தன், “நான் எழுத்தாளன். நான் என்ன எழுத வேண்டுமென்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என கர்ஜித்தார்.
தாலி, ஊழ், ஊரை எரிப்பது என்றெல்லாம் பேசிய சிலப்பதிகாரம் ‘தமிழர் காவியம்’ எனக் கொண்டாடப்பட்டது. கம்ப ராமயாணமோ ‘ஆரிய சூழ்ச்சியாகவும்’ ஆபாசக் குப்பையாகவும் ஏசப்பட்டது, அதை தோலுரிப்பதற்காகவே ‘கம்ப ரசம்’ எழுதி தன்னை இலக்கியவாதியாக நிறுவிக் கொண்டதோடல்லாமல் பொது மேடைகளில் ரா.பி. சேதுபிள்ளையை சமர் செய்து தோற்கடித்துவிட்டதாகவும் பேரறிஞர் தம்பட்டம் அடித்தார்.
முத்தமிழ் என்று இல்லாத ஒன்றை வழிமொழிந்தனர். அது என்ன முத்தமிழ் என்றால் இயல், இசை நாடகம் என்றனர். சிலப்பதிகாரம் நாடக இலக்கியம் என்று சொல்லப்பட்டது. முத்தமிழ் என்பது பிழை, ‘நாடக இலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று தமிழில் இல்லை’ என்று தமிழர்களுக்கு சொல்லிகொடுத்தார் ஜெயகாந்தன்.