நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை,
அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.