Thurueriya Irumbugal Tamil Interesting Story Part - 2
**அத்தியாயம் 8** வானில் இருந்த நட்சத்திரங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்றாள். “சொல்லுங்க?? நந்தினி யாரு அந்த ஈசன்.“ “ஈசன் தான் எல்லாமே ஈசன் தான் என்னோட உயிர் ஈசன் தான் எனக்கு?“ போதும் இந்த வார்த்தைகள் மட்டும் போதும் அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது. அவன் தலையில் கூர்மையான ஆணியை அடித்து அடித்து இறக்கியது போலவே இருந்தது. “எல்லாமேனா? உங்க கணவரா கல்யாணம் ஆகலன்னு சொன்னிங்களே?“ மதன் நந்தினியிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நிறைய நாட்கள் முயற்சி செய்து ஒரு நாள் அதை கேட்டே விட்டான். அன்று தனநந்நினி மதிய உணவு மெனு ரெடி செய்து கொண்டிருந்தாள். காளான் பிரியாணி, எக் கஸ்டர்ட் டார்ட்ஸ்,கிளாசிக் சாக்லேட் மோஷஸ் செய்து கொண்டிருந்தாள். அவள் வந்ததில் இருந்தே ஒரு பங்கு கூட்டம் அதிகமாக தான் வருகிறது. இவர்கள் எப்போதும் பீட்சா,பர்கர் செய்து போர் அடித்து கொண்டிருந்தார்கள். தனா விதவிதமாக மெனு தயார் செய்கிறாள். இன்று செய்த மெனு கண்டிப்பாக இன்னோரு நாள் ரிப்பிட் செய்வது இல்லை தினம் தினம் புதுசு கண்ணா புதுசு போல தான். மதன் தனா செய்த பிரியாணியை டேஸ்ட் செய்து “வா..வாரே..வா.. இப்படி சமைச்சா அண்டா பிரியாணி எனக்கே பத்தாது போலவே“, நந்தினியின் சமையலை எப்போதுமே பாராட்டமாட்டான் மதன். அன்று அவன் பாராட்டி பேசினான், காரணம் அவளை பற்றி தெரிந்துக்கொள்ளவே ஆனால் நிஜமாகவே காளான் பிரியாணி அற்புதமாக தான் இருந்தது. “நீங்க லவ் மூவியெல்லாம் பார்ப்பிங்களா தனா? கடைசியா என்ன படம் பார்த்திங்க?” “மிட் நைட் சன் ஹாலிவுட் மூவி“ “ஓ..அது லவ் மூவியா, யாரோட பார்த்திங்க??“ “ஆமாம், என்னோட பிரண்டுகூட..“ “நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்ல தனா??“ சிறிது நேர அமைதி “நீங்க ஏன் இன்னும் பண்ணிக்கவே இல்ல மதன்.“ “தப்பு தான்மா நான் கேட்டேன் பாரு?“ இருவருக்கும் நடந்த உரையாடலின் போது நேவிதன் அங்கு தான் கொஞ்சம் தள்ளி இருந்தான். பல்லி ஒன்று சுவற்றில் இருந்து டுக்..டுக்.. கத்தியது. அது உணவுக்கா, இல்லை அதன் இன்னொரு துணைக்கா அந்த சத்தம் மீண்டும் நேவிதனை நிகழ்காலத்திற்கு வரவைத்தது. தனா அதே இடத்தில் இப்போது இவனை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தாள். “அப்போ அந்த படம் ஈசன் கூட தான் பார்த்திருப்பாலோ.“ இவனுக்கு இந்த சந்தேகம் வேறு. நந்தினி தொடர்ந்தாள். திருச்சி அன்று நடுஇரவு ஒரு மணி இருக்கும். தனா ஹாஸ்டலில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்து ஏதோ புத்தகத்தை பிரட்டிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஜன்னலுக்கு வெளியில் சாலையில் இளைஞன் ஒருவன் பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு அதில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவன் நிற்பதை தனா பார்த்துக்கொண்டிருந்தாள். யார் இவன்?? ரொம்ப நேரமாக நின்றுக்கொண்டிருக்கிறானே. அப்போது தனது ஹாஸ்டலில் இருந்து யாரே ஒரு பெண் செல்ல, ஆகா இது அந்த கீழ் அறையில் உள்ள நான்காவது ரூமில் இருக்கும் ஜாஸ்மீன் தானே. இவள் நன்றாக படிக்கிறவள் ஆச்சே இவள் இந்த நேரத்தில் எங்கு போகிறாள் இப்போது தனா எழுந்து நின்று உற்று உற்று பார்த்தாள். அவளே தான் என்று சரியாக முடிவு செய்துக்கொண்டாள். அந்த இளைஞனையும் உற்று பார்த்துக்கொண்டாள். இருவரும் பைக்கில் ஏறி பறந்தார்கள். மறுநாள் காலை ஹாஸ்டலே அல்லோகல பட்டது. தனாவிற்கு புரிந்துவிட்டது. ஜாஸ்மீன் தான் காரணம் என்று. அவள் அருகில் வாயைபிளந்து கொண்டு நின்ற தன் தோழி சரண்யாவிடம் “ஜாஸ்மீன் நேத்து ராத்திரி ஒரு பையன்கூட போனாடி நான் பார்த்தேன்.“ “நீ வாய மூடு. கடைசி வருஷம் ஒழுங்கா முடிச்சிட்டு போ இப்போ போய் இப்படியே சொல்லு. அவங்க வீட்டுல இருந்து ஆளுங்க வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்க கண்டுபிடிச்சிக்கட்டும் நீ பேசம இரு.“ எதற்கு வம்பு இவள் சொல்லுவது சரிதான் நமக்கு ஸ்பான்சர் கொடுப்பவர் யாரோ இந்த நேரத்தில் இப்படி நாம் பிரச்சனைல மாட்டி ஏன்? ஸ்பான்சர் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று நினைத்து, தனா தன்னையே அமைதிப்படுத்திக்கொண்டாள். ஒருவாரம் கழிந்தது. படிப்பு ஒரு பக்கம் அது முடிந்ததும் சிலமணி நேரங்கள் ரெஸ்டாரண்டில் பகுதிநேரமாக வேலைப்பார்த்து கொண்டிருந்தாள் தனநந்தினி. “தனா ஒரு தோசை அன்ட் பில்டர் காஃபி“ ஆர்டர் கொடுத்தார் சர்வர் சண்முகம். ரெடி செய்து பிளேடிங் செய்தாள் அது ஒரு சின்ன ஒபன் குக் ரெஸ்டாரண்டு. அப்போது எதார்த்தமாக அவனை பார்த்தாள் தனா. “அவனே தான் இவன் மட்டும் இருக்கான் ஜாஸ்மீன காணும் ஏதும் செஞ்சிட்டானோ?“ சண்முகம் ஆர்டரை வாங்க வந்தார் “அண்ணா நான் கொடுக்குறேன் அந்த புளூ சர்ட் தானே” “ஆமாம் தனா“ ஆர்டரை எடுத்துக்கொண்டு அந்த டேபிள் அருகே சென்றாள். அந்த வாலிபன் குனிந்து மெனுக்கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தான். “உங்க ஆர்டர் சார்..“டேபிள் மீது வைத்தாள். “தேங்யூ“ சப்ளே செய்துவிட்டும் அவள் நகராமல் நின்றதை பார்த்தவன். தலையை தூக்கினான். எதிரே நின்ற பெண் பிம்பம் யார் இவள்?? உடலுக்கு ஏற்ற எடை, எடைக்கு ஏற்ற உயரம் இவளா சர்வர் நம்பவே முடியவே இல்லையே நம்மிடம் முதலில் ஆர்டர் எடுத்ததும் இவளா? எத்தனை லட்சனத்தில் நான் கவனிக்கிறேன். ஆனால் ஏன் இவள் நம் அருகே நிற்கிறாள். அவன் யோசனையை தூண்டிவிட்டான். அதற்குள் அவள் எதிரே இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள். “யார்னு யோசிக்கிறிங்களா??“ “ஆமாம்..யார் இந்த அழகான பெண்? அதுவும் என் அருகே இத்தனை உரிமையாய் என்று யோசித்தேன்.“ சரியான வழிஞ்சலா இருக்குமோ?? இழுத்துக்கிட்டு போனது பாத்தாது போல பேசிப்பேசியே என்னையும் இழுத்துக்கிட்டு போயிடுவான் போலயே? “என்ன மேடம் யோசனை?“ “ஜாஸ்மீன் எப்படி இருக்கா?“ “ஜாஸ்மீன் நல்லா இருக்காங்க? உங்க ப்ரண்டா?“ “இல்ல ஜெஸ்ட் காலேஜ் மேட் அவ்வளவு தான்.“ “காலேஜ் மேட்டையே இப்படி விசாரிக்கிறிங்க? அன்னைக்கு ஜன்னல்கிட்ட உட்கார்ந்து புத்தகத்தை பிரட்டுன உருவம் நீங்க தானா?“ அடப்பாவி இவன் நம்பளை எப்படி கவனிச்சிருக்கான். அப்போ நம்ம பார்த்தத பார்த்திருக்கான் அதான் அதிர்ச்சிக்காட்டாம ஜாஸ்மீன் பத்திக்கேட்டதும் கூலா பதில் சொல்றானா? “நீங்க என்ன பார்த்திங்களா?“ “இல்ல மேடம்? அந்த மங்களான ஒளி, மெல்ல காற்று, ஜன்னல்கிட்ட மட்டும் ரொம்ப வெளிச்சமா இருந்தது. கண்டிப்பா ஒரு பெண்ணா தான் இருக்கனும் அதுவும் அழகான பெண்ணா தான் இருக்கனும்னு நினைச்சேன் ஆனா இவ்வளவு அழக எதிர்பார்க்கல?“ “நீங்க சாப்பிடுங்க நான் கிளம்புறேன்.“ “ஸாரி மேடம் உட்காருங்க? நான் சும்மா தான் விளையாட்டா? கோபப்படாதிங்க? நான் உங்கள பார்க்கவே இல்ல, சும்மா கெஸ்ல அடிச்சேன். நீங்க ஜாஸ்மீன கேட்டதும் கண்டிப்பா எங்கள அந்த நாள்ல பார்த்திருக்கிங்கன்னு புரிஞ்சிகிட்டு நானா தான் கோர்வையா சொன்னேன்.“ “அது சரி.. சத்தியமா நீங்க பார்க்கவே இல்லை?“ “இது என்ன சின்ன பிள்ளை தனம் சத்தியம்..சாமி சத்தியம் போதுமா?“ இப்போது தனா அவனை கவனித்தாள். நெருக்க நெற்றியை மூடிய கேசம், பட்டையான உதடுகளை தொட்ட மீசை, நல்ல கலர், உயரம் அழகாக தான் இருக்கிறான். “ஜாஸ்மீன்..“ “ஜாஸ்மீனும் நானும் ஓடி போயிட்டோம்னு முடிவு பண்ணிட்டிங்களா? நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது. அவங்க என்னோட பெஸ்ட் ப்ரண்ட் இரண்டு வருஷமா ப்ரண்டா இருக்கோம். அவங்களுக்கு வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க அவங்க அத்தை பையனையே, அவன் சரியான டிரக் அடிக்ட்டாம். அவங்களுக்கு கல்யாணம் பிடிக்கல என்கிட்ட உதவி கேட்டாங்க தன்னை மெட்ராஸ் பஸ் ஏத்திவிடும் படியாகவும் அங்க அவங்க ப்ரண்டு இருக்காங்கன்னு அங்க போய் அவங்க செட்டில் ஆகுறதாகவும். பஸ்ட் நான் நம்பல அப்பறம் கொஞ்சம் விசாரிச்சி உண்மைய தெரிஞ்சிக்கிட்டன். உங்க ஹாஸ்டல்ல அவங்கள கண்கானிக்க ஆட்கள் நிறைய போட்டுருந்தாங்க, அதான் அந்த மிட்நைட் பிளான். அவங்கள மெட்ராஸ் அனுப்பி வச்சிட்டேன் எனக்கு தெரிஞ்ச இடத்துல வேலையும் வாங்கி கொடுத்துட்டேன்.“ மூச்சுகூட விடமால் பத்து நிமிஷத்தில் அத்தனையும் சொல்லிமுடித்தான். இவள் பே என்று வாயை பிளந்து உட்காந்திருந்தாள். இவன் சொல்வது உண்மையா?? இல்லை கதைவிடுகிறானா?? “இப்போ கூட நான் சொல்றது உண்மையான்னு தானே யோசிக்கிறிங்க?? வெயிட்“ ஒரு நிமிடம் தன் கைப்பேசியை எடுத்து அந்த தொடுதிரையை நகர்த்தி எதோ நம்பர் தேடிக்கொண்டிருந்தான். ஏதோ புதையலை கண்டுபிடித்தவன் போல அவன் கண்கள் சிரித்தது. இப்போது நம்பரை டயல் செய்து தனாவிடம் நீட்டினான்.
No comments yet