read.cash Log in
@Mani more from that month

Kodikalin Vagaikal Tamil Vettu Thootam

கொடிகள் கொடியை பொறுத்த வரையில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது. நான் என்ன தான் முயற்சித்தாலும் எல்லாமும் கருப்பு கொடியை தான் காட்டுகின்றன. எல்லாவற்றிலும் சொல்லி வைத்தது போல ஒரே ஒரு காய். அதையும் பறித்து குழம்பு வைத்து சந்தோஷ பட்டுக் கொண்டோம். செடியில் அவரை காய்க்கிற மாதிரி, செடி பாகல், செடி புடலை, செடி சுரை என்று இருந்தால் நல்லா இருக்கும் போல. ஜூலையில் தரையில் வைத்த புடலை, பாகல் எல்லாம் ஏகத்துக்கு சொதப்ப ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு பைகளிலேயே காயர் பித் வைத்து செய்து பார்க்கலாம் என்று செப்டம்பரில் இன்னொரு நடவு செய்தேன். பாகல் செமையாக வந்தது. வெற்றி.. வெற்றி என்று மனசு லேசா கூவ ஆரம்பிப்பதற்குள் செடியின் தண்டு எல்லாம் தடித்து செடி அப்படியே குன்றி போனது. புடலையும், பீர்கனும் ஏகத்துக்கு பூத்து கடைசியில் ஒரே ஒரு காய் மட்டும் கொடுத்தது. சுரையில் வெறும் பூ மட்டும் தான். கடுப்பில் செடி வாடி போகட்டும் என்று தண்ணீரே ஊற்றாமல் ஒரு வாரம் விட்டு விட்டேன். திடீரென்று ஒரு காய் மட்டும் கண்ணில் தட்டுபட, இதிலும் ஒரு காய் பறிக்கனும்னு இருக்கும் போல என்று மறுபடி நீர் ஊற்ற ஆரம்பித்து இருக்கிறேன். செடிக்கும் கொடிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கிய வித்தியாசம் கொடியில் மட்டும் தான் ஆண் பூ, பெண் பூ என்று இருக்கிறது. பெண் பூவில் பூவின் காம்பிலேயே சிறிதாக காய் இருக்கும். அது மட்டும் தான் காய்க்கும். தவிர பெண் பூ பூத்தாலும் அது அயல் மகரந்த சேர்க்கையை நிறைய சார்ந்திருக்கிறது. தோட்டத்தில் தேனீ, வண்ணத்து பூச்சிகள் வரத்து ஏதும் இல்லை என்றாலும் பிரச்சனை தான். அதை சரி செய்ய நாமே hand pollination செய்யலாம் (ஒரு ஆண் பூவை பறித்து காயோடு பூத்திருக்கும் மலர் மேல் லேசாய் தேய்த்து விடலாம்). கொடிக்கு அதற்குண்டான சத்துக்களோ, தகுந்த சீசனோ அமையவில்லை என்றால் ஆண் பூவாக தான் வருகிறது. சீசன் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் (நண்பர் ஒருவர் கொடி அவரை பனி காலத்தில் (மார்கழி) நன்றாக காய்க்கும் என்றார். அதற்கு ஏற்றார் போல ஆகஸ்ட், செப்டம்பரில் விதைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்). கொடியை பொறுத்தவரை சவால் நிறையவே இருக்கிறது. சீக்கிரம் கற்றுக் கொண்டு எதாவது உருப்படியாய் இந்த தை படத்திலாவது செய்ய வேண்டும்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.