read.cash Log in
@Mani

Sodakku Thakkali En Vettu thoottam

தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின் இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால் ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி பழம் தேடுவார்கள். இப்படி தோட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த செடிகள் வைப்பது இன்னும் தோட்டத்தை அழகாக்கும். சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை. எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும். உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன் மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர். எங்கள் விளையாட்டுகளுள் இதுவும் ஓன்று. தவிர நாங்கள் வீட்டில் இருந்ததை விட தேரிக்காட்டுக்குள் சுற்றியதும், ஊரை சுற்றி கருவேலங்காட்டுக்குள் காட்டுப்பயல்களாக சுற்றியதும் தான் அதிகம். அது ஒரு தொலைந்து போன சொர்க்கம். சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காட்டில் பழுத்து கிடக்கும் அத்தனை பழங்களையும் இஷ்டத்துக்கு பறித்து சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்போம். இதை பற்றி எழுத ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும், So.. Back to gardening.. சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும். இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு. இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். (அதனால் நாங்கள் ‘நெய்’ தக்காளி என்போம்). இதில் நெய் தக்காளி இங்கே கோவையில் தோட்டத்தில் நிறைய தானாக வளரும். நானும் ஒரு சில பைகளில் விட்டு வைத்து நிறைய பழம் பறிப்போம்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.