பூமி வெப்பமடைதல் பற்றிய புத்தகம். Stories ,History மற்றும் Politics என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் Stories மட்டும் புத்தகத்தின் பாதி. பூமி வெப்பமடைதல் பற்றி ஏன் தற்போதைய புனைவுகளில் அதிகம் வரவில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் மனிதன் நடந்து கொள்வதுதான் என்கிறார். நமக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை நாம் கண்டிப்பாக கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
ஒரு பக்கம் பூமியின் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் படிப்படியாக இயற்கைப் பற்றிய விவரங்களைக் குறைக்க ஆரம்பித்தார்கள்.தெரிந்தோ தெரியாமலோ இப்படி ஆனது. ஆனால் நம் கண்முன்னால் காணுவத்தைக் கூட எழுதாதது வருத்தமளிக்கிறது என்கிறார் கோஷ். அப்படி எழுதினாலும் அதை அறிவியல் புனைவு(sci-fi ) அல்லது cli-fi பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள் அதனால் அதிகபேர் படிக்க முடிவதில்லை. முதல் பகுதியில் கோஷ் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னமோ நான் ஏதோ சயின்ஸ் கிளாசில் இருப்பதுபோல் இருந்தது. பாதி புரிந்தும் பாதி புரியாமலும். பிறகுதான் தெரிந்தது இந்த புத்தகம் ஒரு லெச்சரை விரிவாக எழுதியது என்று
History பகுதியில் பூமியின் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணம் முதலாளித்துவம் அல்ல மாறாக பேரரசுகள் அதிலும் பிரித்தானிய காலனித்துவம் என்கிறார். பிரித்தானிய அரசின் கொள்ளைதான் காலனிய நாடுகளில் பெரும் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தியது.அதன் மூலம் பிரித்தானிய தொழில்மயமாக்கலில் பெரும் வளர்ச்சியடைந்தது.அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக் காட்டுகிறார் கோஷ்.ஆனால் அதில் ஒரு பயனும் இருக்கிறது என்கிறார்.அதாவது பிரித்தானியாவில் இருந்து விடுபட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காலனிய நாடுகள் தொழில்மயமாக்கலுக்குள் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. அதனால் சுற்றுப்புற சீரழிவு தாமதமாகத்தான் வந்தது என்கிறார்.சட்டென்று மனதுக்கு சரியென்று படுகிறது ஆனால் ஆனால் மக்கள்தொகை மற்றும் ஏற்றத்தாழ்வு நூறாண்டுகளுக்கு முன் இப்போது போல அல்ல. ஏனோ அதை பற்றி கோஷ் ஏதும் சொல்லவில்லை.ஆசியாவின் பங்களிப்புதான் பூமி வெப்பமடைதலில் மிக முக்கியம் ஏனென்றால் அங்குதான் அதிக மக்கள் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்கிறார். அது உண்மைதான் நான் வாசித்த பல்வேறு அறிக்கைகளில் அதுவே கூறப்பட்டுள்ளது .
Politics பகுதியில் பெயரைப் போலவே பூமி வெப்பமடைதல் பற்றிய அரசியலைப் பேசுகிறார் கோஷ்.பூமி வெப்பமடைதல் பற்றி நம்மளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது எந்த முடிவு எடுப்பதற்கும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்கிறார். பாரிஸ் ஒப்பந்தத்திற்கும் போப் பிரான்சிஸின் "Laudato Si" கடிதத்திற்கு உள்ள பெரும் வித்தியாசத்தை எடுத்துக்காட்டி இப்படி மத நிறுவனங்கள் தான் மக்களை பெரிதாகவும் விரைவாகவும் இணைக்க முடியும் என்கிறார்.போப் பிரான்சிஸின் "Laudato Si" கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஆவணம். போப் அனைத்தையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் மாதிரி எழுதியுள்ளார் ஆனால் பாரிஸ் ஒப்பந்தமோ ஏதோ corporate ஒப்பந்தம் மாதிரி எவருக்கும் புரியாத அளவுக்கு உள்ளது.பூமி வெப்பமடைதல் பற்றி ஒரு புதிய கோணத்தைக் வாசகருக்கு அளிக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.