3
9
ஒரு ராகத்தின் மேல்
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
-வண்ணதாசன்
மனிதத் திரையில் வயலினையும் மறைந்திருப்பதாகவும் கூறிக் கடந்தார் அவர்